உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சுரங்க விரிவாக்க பணி கணக்கீடு அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

 சுரங்க விரிவாக்க பணி கணக்கீடு அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக கணக்கீடு செய்ய வந்த அதிகாரிகளை பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. என்.எல்.சி., இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மந்தாரக்குப்பம் என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகள் அருகே உள்ள பெரியார் நகர், ஐ.டி.ஐ., திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் கணக் கெடுக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு அருகே உள்ள சிவாஜிநகர், நமச்சிவாய ரைஸ்மில் உள்ளிட்ட என்.எல்.சி., பகுதிகளில் கணக்கெடுப்பு பணிக்கு நேற்று காலை 10:30 மணியளவில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதிக்கு சென்றனர். இது குறித்து தகவலறிந்த வந்த வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மந்தாரக்குப்பம் கடைவீதி நான்கு முனை சந்திப்பு பகுதியில் வருவாய்துறையினரை தடுத்து நிறுத்தி, 'இப்பகுதியில் அளவீடு பணி செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என வருவாய் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை தாசில்தார் ராஜதுரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்தார். அதை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் கணக்கெடுக்கும் பணியை கைவிட்டு திரும்பி சென்றனர். பொதுமக்கள் 11;00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி