வெளிவட்ட சாலை அமைக்கும் பணி சிதம்பரத்தில் அமைச்சர் ஆய்வு
சிதம்பரம், : சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அமைக்கப்படும் வெளிவட்ட சாலை பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சிதம்பரத்தையொட்டி வண்டிகேட்டில் இருந்து பழைய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, அண்ணாமலை பல்கலை செல்லும் வகையில், ரூ. 34.76 கோடியில் வெளிவட்ட சாலை அமைக்கப்படுகிறது.இத்திட்டத்தில்,தில்லையம்மன் ஓடை மற்றும் கான்சாகிப் வாய்க்கால் பலப்படுத்தி, 2.40 கி.மீ துாரத்திற்கு புதிய சாலைக்கான பாதுகாப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அமைச்சர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், சிதம்பரம் பகுதியில் சுமார் ரூ. 400 கோடிக்கு மேல் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. நகரின் வெளியே புதிய பஸ் நிலையம், புதிய காய்கறி மார்க்கெட், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், பழைய பஸ் நிலையம் புதுப்பித்தல், வெளி வட்டசாலை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. சிதம்பரம் நகரில் 17 குளங்களை இணைத்து, அந்த குளங்களில் ஆண்டு தோறும் தண்ணீர் இருக்கும் வகையில் தூய்மையான நீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என, தெரிவித்தார்.அப்போது கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நகராட்சி சேர்மன் செந்தில்குமார், நகராட்சி கமிஷனர் மல்லிகா,பொதுப்பணி துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.