விருத்தாசலம்; விருத்தாசலத்தில் சினிமா பாணியில் கடை உரிமையாளரிடம் மொபட்டை அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில், பாபுராம் என்பவர் பேக், பெல்ட், ஷூ கடை வைத்துள்ளார். நேற்று பகல் 12:00 மணியளவில் கடைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அதிக விலையுடைய பொருட்களை தேர்வு செய்துள்ளார். பின்னர், கையில் பணம் இல்லை; பஸ் நிலையத்தில் நிற்கும் தந்தையிடம் பணம் வாங்கி வருவதாக கூறியவர், பஸ் நிலையம் வரை சென்று வர பைக் வேண்டும் என, கேட்டுள்ளார். தன்னிடம் பைக் இல்லாத நிலையில், கடையில் அதிக பொருட்கள் தேர்வு செய்து வைத்துள்ளதால், அந்த நபரின் வலையில், பாபுராம் விழுந்தார். உடனடி யாக, அருகிலுள்ள கடை ஊழியரிடம் இருந்து ஆக்டிவா மொபட்டை வாங்கி கொடுத்து, தனது கடை ஊழியர் ஒருவரையும் உடன் அனுப்பியுள்ளார் . பஸ் நிலையத்தில் கடை ஊழியரை இறக்கிவிட்ட ஆசாமி, தனது அப்பா நடந்து வருகிறார். அவரை அழைத்து வருகிறேன்; இங்கேயே நில்லுங்கள் என கூறிச்சென்றவர்,திரும்பி வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கடை ஊழியர் திரும்பி வந்து தெரிவித்த தகவலின் பேரில், பாபுராம் உள்ளிட்டோர் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால், மர்ம ஆசாமி எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து மொபட் உரிமையாளர் சதீஷ்ராஜா, 43, புகாரின் பேரில், பலே ஆசாமியை விருத்தாசலம் போலீசார் தேடி வருகின்றனர். 1980களில் வெளியான இயக்குனர் பாண்டியராஜனின் 'ஆண் பாவம்' படத்தில், ஜவுளி கடையில் புத்தாடை வாங்கி விட்டு, கடை ஊழியரை உடன் அனுப்புங்கள், பணம் கொடுத்து அனுப்புகிறேன் எனக் கூறி ஏமாற்றும் பாணி யில், விருத்தாசலத்தில் மொபட்டை மர்ம நபர் அபேஸ் செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.