மகன் மீது பொய் வழக்கு பதிந்ததாக கலெக்டர், எஸ்.பி.,யிடம் தாய் மனு
கடலுார், : மகன் மீது பொய் வழக்கு பதிந்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் தாய் மனு கொடுத்தார்.கடலுார் பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், செல்வ மகேஷ், ரவிச்சந்திரன் தலைமையில் வண்டிக்குப்பத்தை மணிகண்டன் மனைவி ஜெயக்கொடி கொடுத்துள்ள மனு;கடந்த 31ம் தேதி இரவு வண்டிக்குப்பம் அருகில், சமத்துவபுரம் எதிரில் இருந்த ஓட்டலில் என் மகன் ஜெயக்குமார் சாப்பாடு வாங்க சென்றார். அப்போது, 10 பேர் கும்பல் நீ ஏன் இங்கு நிற்கிறாய் எனக்கேட்டு தாக்கினர். பின், வடக்கு ராமாபுரம் காலனிக்கு துாக்கி சென்று, அங்கிருந்த வி.சி., கட்சி கொடி கம்பத்தில் கட்டி வைத்து 15க்கும் மேற்பட்டோர் என் மகனை தாக்கினர். படுகாயமடைந்து மயங்கி கிடந்த என் மகனை, காவல்துறையினர் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.கல்லுாரி படிக்கும் என் மகனை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மகன் மீது பொய் வழக்கு பதிந்து தேர்வு எழுத விடாமல் கைது செய்த திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனு கொடுக்க நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்ததால், டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.