உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அணைக்கரை புதிய பாலத்தில் போக்குவரத்து துவக்கம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நிம்மதி

அணைக்கரை புதிய பாலத்தில் போக்குவரத்து துவக்கம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நிம்மதி

சிதம்பரம்: விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலையில், அணைக்கரையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த கொள்ளிடம் புதிய பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்து, போக்குவரத்து துவங்கியதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1836ம் ஆண்டு சர் ஆதர் காட்டன் என்பவரால், கீழணை எனும் அணைக்கட்டு, ஷட்டருடன் கூடிய பாலமாக அமைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் இருந்தாலும், அணையின் முழு கட்டுப்பாடு, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நீர்வளத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு அணைக்கரை பாலத்தின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விரிசல் ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு, ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்பவர்கள் நீண்ட நேரம் பாலத்திற்கு முன்பு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி., ) நான்கு வழிச்சாலை பணியில், அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் அமைக்கும் பணி துவங்கியது. மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் மற்றும் கட்டுமான பணியின்போது, துாண் ஒன்று இடிந்து விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் பாலம் பணி முடிவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பாலம் பணி முழுமையாக முடிவடைந்து, நேற்று முன்தினம் முதல், வாகன போக்குவரத்து துவங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால், பழைய அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து குறைந்தது. கனரக போக்குவரத்து குறைந்தால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நுாற்றாண்டு கடந்த கீழணை பாலத்திற்கு, பாதிப்பு குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ