அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள்... கையிருப்பு; கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்
கடலுார்: கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்கைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது என, கலெக்டர் தெரிவித்தார். கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புறநோயாளிகள் பதிவறை, பொது மருந்தகம், தொற்றாநோய் மருந்தகம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கழிவறை, மனநலப் பிரிவு, தோல் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். பின், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின், அவர் கூறுகையில், 'தமிழக முதல்வர் அனைத்து மக்களுக்கும் உயர்தரமான மருத்துவ வசதிகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கடலுார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு அதிகளவில் வரவில்லை.கடந்த 4ம் தேதி காய்ச்சல் மற்றும் சளி, இருமல் பாதிப்பினால் அதிக அளவில் பொதுமக்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர். இன்று (நேற்று) 87 நபர்கள் காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனையை அணுகியுள்ளனர்.கடலுார் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் தற்போது போதிய டாக்டர்கள் உள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக டாக்டர்கள், பணியாளர்கள் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிகிச்கைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள அச்சப்பட தேவையில்லை. தற்போது குறைந்த அளவில் காய்ச்சல் பாதிப்புகள் உள்ளது. மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபடியான நபர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால் அப்பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.கடலுார் மாவட்டத்தில் தற்போது 3 நபர்கள் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் திறந்த வெளியில் துாக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர்கள் உள்ளிட்டவற்றில் தேங்கும் மழைநீரை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தடுப்பு பணிகள் டெங்கு பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது அதிக அளவிலான பொதுமக்கள் வாகனங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும், மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பருவநிலை மாற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றார்.ஆய்வின்போது, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமார், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.