நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வர்த்தகர்கள் போராட்டம் நடத்த முடிவு
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போராட்டம் நடத்துவோம் என வர்த்தகர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.சென்னை - கன்னியாகுமரி தொழில்தட சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கடலுாரில் இருந்து மடப்பட்டு வரை பணிகள் முடிந்தது. நெல்லிக்குப்பம் நகரத்தில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்து அதன் மீது சிலாப் போட்டு மூடினர்.மேலும் சாலையோரம் நடைபாதை போன்று மழைநீர் வடிகாலையொட்டி இரும்பிலான தடுப்புகள் அமைத்தனர். ஆனால், அதையொட்டி கடைகள் வைத்திருந்தவர்கள் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து கடைகளை விரிவாக்கம் செய்துள்ளனர்.ஏற்கனவே நெல்லிக்குப்பத்தில் பல இடங்களில் சாலை குறுகியிருப்பதால், பாதசாரிகள் நடந்து செல்லக்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படுகிறது.அதனைத் தொடர்ந்து இரும்பு தடுப்பு வரை கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் மூலம் 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெடுஞ்சாலைத் துறை மூலம் அகற்றப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதற்கிடையே, நெல்லிக்குப்பம் கடைவீதி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலை குறுகலாக இருப்பதால் கழிவுநீர் கால்வாயில் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் அமைக்கவில்லை.அந்த இடங்களில் சாலையிலேயே நடக்க வேண்டியுள்ளது. முதலில் அனைத்து இடங்களிலும் நடப்பதற்கு வழி செய்த பிறகு நாங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம். மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போராட்டம் நடத்துவோம் என வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.