உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு கடை உரிமம் வழங்குவதில் அதிகாரிகள்... கிடுக்கிப்பிடி; விதிகளை பின்பற்றாத விண்ணப்பங்கள் நிராகரிப்பு

பட்டாசு கடை உரிமம் வழங்குவதில் அதிகாரிகள்... கிடுக்கிப்பிடி; விதிகளை பின்பற்றாத விண்ணப்பங்கள் நிராகரிப்பு

கடலுார் : மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடை உரிமம் கேட்டு, விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், வெடிபொருள் சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி கோரிய 28 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை நடத்த, நிரந்தர மற்றும் தற்காலிக உரிமம் பெறுவது அவசியம். பட்டாசு கடைக்கு உரிமம் பெறாமல் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் ஆகியன வெடிமருந்து சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்திடம் பட்டாசு கடை நடத்த உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.வெடிபொருள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால், வருவாய், தீயணைப்பு மற்றும் போலீசார் ஆய்வு செய்து, தடையில்லா சான்று வழங்குவர். அதன் பிறகு உரிமம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், தீபாவளி வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் கோரி விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 10 தாலுகா பகுதிகளில் இருந்து பட்டாசு விற்பனை செய்ய நிரந்தர உரிமம் கோரி 280 பேர் விண்ணப்பித்தனர்.அதில், 252 விண்ணப்பங்கள் விசாரணை செய்யப்பட்டு, 213 விண்ணப்பங்கள் புதுப்பிக்கப்பட்டு பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர புதுப்பித்தலுக்கு வரப்பெற்ற 28 உரிமங்களின் மீது எஸ்.பி., சப் கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதேபோன்று, தீபாவளி பண்டிக்கைக்காக மட்டும் தயார் செய்யப்பட்ட பட்டாசு விற்பனை செய்ய தற்காலி விற்பனை உரிமம் கோரி ஆன்லைன் மூலம் கடந்த 14ம் தேதி வரை 130 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில், தற்போது வரை 61 தற்காலிக உரிமங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும், வெடிபொருள் சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி கோரிய 28 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கடந்த 14ம் தேதிக்கு பின், நேற்று முன்தினம் வரை தற்காலிக உரிமம் கோரி 51 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.ஆண்டுதோறும், மாவட்டத்தில் உரிமம் பெறாத நபர்கள், பட்டாசுகளை வாங்கி வந்து, கிப்ட் பாக்ஸ் என்ற பெயரில், பெட்டி கடைகள், சாலையோரம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பட்டாசு கடைகளில், எதிர்பாராத சூழ்நிலையில் விபத்து ஏற்பட்டால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ