தண்ணீர் தேங்கிய வயல்கள் அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே திடீர் மழையால், கிளை வாயக்கால்கள் துார் வாரப்படாததால், வயல்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு ,சிறுகாட்டூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் துார் வாரப்படாததால், திடீர் மழை காரணமாக, சுமார் 1000 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் பாதிப்படைந்தனர். இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதனையடுத்து நேற்று காலை, பொதுப்பணி துறை, கீழணை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன். வல்லம்படுகை உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கீழணையில் இருந்து பிரியும் கஞ்சங்கொல்லை வாய்க்கால் தலைப்பில் மட்டும் துார் வாரப்பட்டுள்ள நிலையில், மேலும் பல மீட்டர் துாரம் துார் வாரப்படாமல் உள்ளதும், மேலும் வேளாண்மை துறைக்கு சொந்தமான சி ,டி, பிரிவு வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பதும் வயங்களில் தண்ணீர் தேங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, தற்போது விவசாய பணிகள் துவங்கியுள்ள நிலையில், கனரக இயந்திரங்களை பயன்படுத்தி வாய்க்கால்களை தூர்வார முடியாது என்பதால், விவசாயிகளை ஒன்றிணைத்து, பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில், வாய்க்கால் அடைப்புகள் அகற்றும் பணிகள் துவங்கி செய்து வருகின்றனர். மேலும் வரும் கோடை காலத்தில், கஞ்சங்கொல்லை வடிகால் வாய்க்கால் தடுப்பு கட்டைகள் அமைத்து தூர்வாரப்படும் என தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து வாய்க்கால்களும் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.