40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; 4 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்; மாவட்ட கல்வித்துறையில் தமாஷ்
தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார். இடையில் பள்ளியில் இருந்து நிற்கும் மாணவர்களை 'நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி' திட்டத்தை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. அதிகளவு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் குறைந்தளவு ஆசிரியர்கள் உள்ளனர். ஒற்றை இலக்கில் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் அதிகளவு ஆசிரியர்கள் உள்ளனர். இந்த மாதிரி விகிதாசாரத்தில் ஆசிரியர்கள் இருந்தால் எப்படி மாணவர்களுக்கு கல்வித்தரத்தை உயர்த்த முடியும். உதாரணமாக, கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கே 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். அதில் ஒரு ஆசிரியர், 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் ஏற்கனவே ஒரு ஆசிரியர் பணியில் உள்ள சுப உப்பலாவாடி கிராம பள்ளிக்கு மாறுதல் உத்தரவு வாங்கிச் சென்றுள்ளார். தற்போது 40 மாணவர்கள் படிக்கும் நடுவீரப்பட்டு பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும்தான் உள்ளார். ஆனால், 4 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிகாரிகள் எப்படி மாற்றல் உத்தரவு வழங்குகின்றனர் என்பதே வியப்பாக இருக்கிறது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.