கடலுாரில் மாடுகளின் உரிமையாளர்கள்... அலட்சியம்; கலெக்டரின் உத்தரவு காற்றில் பறந்தது
கடலுார்: கடலுார் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த அலட்சியம் காட்டும் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாநகராட்சியில் முக்கிய சாலைகளாக பாரதி சாலை, நெல்லிக்குப்பம் சாலை, சிதம்பரம் சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மற்றும் மாநகராட்சியில் உள்ள இதர சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிகமான மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். சில சமயங்களில் சாலையில் கூட்டம், கூட்டமாக நிற்கும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுகிறது. விபத்துக்களை தடுக்கும் வகையில், சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளிலும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகிறது. இந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு, காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். உரிமையாளர்கள் கால்நடைகளை தங்களுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும். பிடிக்கப்படும் கால்நடைகள் எக்காரணம் கொண்டும் திரும்பி வழங்கப்பட மாட்டாது. கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.மேலும், கால்நடைகளுக்கு உரிமைக் கோரி வருபவர்கள் மீது அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகள் வளர்க்கும் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரித்து மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி, கடலுார் மஞ்சக்குப்பம் சாலையில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை, கடந்த 8ம் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். ஆனாலுாம், கலெக்டரின் எச்சரிக்கையை மாடு வளர்ப்போர் கண்டுகொள்ளாமல் தங்களின் மாடுகளை அலட்சியமாக நகராட்சி பகுதிகளில் விட்டுள்ளனர். இதனால், மாடுகள் சாலைகளில் கூட்டம், கூட்டமாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடிப்பதும், எச்சரிக்கை செய்வதுமாக இருப்பதை தவிர்த்து, மாடு உரிமையாளர்கள் மீது கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணமுடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.