கழிவறை வசதி பயணிகள் எதிர்பார்ப்பு
வேப்பூர்: வேப்பூரில் கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் திறந்த வெளி பகுதிகளை பயன்படுத்தும் அவலம் உள்ளது. சென்னை-திருச்சி, கடலுார்- சேலம் தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் வேப்பூர் கூட்டுரோடு உள்ளது. இதன் வழியே சிதம்பரம், மதுரை, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, ஆத்துார், பெரம்பலுார் பகுதிகளுக்கு போக்குவரத்து சிரமமின்றி செல்ல முடிவதால் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பயணிகள் அதிகம் கூடும் வேப்பூர் கூட்டுரோட்டில் பொதுக் கழிவறை வசதி இல்லை. இதனால், வெளி மாவட்டங்களிலிருந்து பல மணிநேரம் பயணம் செய்து வரும் பயணிகள் வேப்பூர் கூட்டுரோட்டில் சாலையோரம் மற்றும் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலம் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வேப்பூர் கூட்டுரோட்டில் பொது கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.