நடுரோட்டில் பழுதான அரசு பஸ் பயணிகள் தள்ளிய அவலம்
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் வழியில் பழுதான பஸ்சை பயணிகள் தள்ளிவிட்ட அவலம் ஏற்பட்டது.விருத்தாசலம் - வேப்பூர் மார்க்கத்தில் தடம் எண் 22, பிங்க் நிற மகளிர் இலவச பயண பஸ் இயங்கி வருகிறது. நேற்று மதியம் வேப்பூரில் இருந்த வந்த பஸ், விருத்தாசலம் தென்கோட்டை வீதி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பழுதாகி நின்றது.நீண்டநேரம் பஸ் ஸ்டார்ட் ஆகாத காரணத்தால், பயணிகள், அவ்வழியே சென்ற பொது மக்கள் பஸ்சை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. பின்னர் ஒரு வழியாக பஸ் புறப்பட்டுச் சென்றது.மகளிருக்கான இலவச பயண பஸ் அடிக்கடி இதுபோல் பழுதாகி நிற்பது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.