கழிவுநீர் கால்வாய் பணி கிடப்பில் மக்கள் கடும் அவதி
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் கழிவுநீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியும் பணி நடக்காததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி 9வது வார்டு ராமு தெருவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல பல ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய் பல இடங்களில் உடைந்து கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பழைய கால்வாயை அகற்றிவிட்டு புதிய கால்வாய் கட்ட நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன் பழைய கால்வாய் உடைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு பணி எதுவும் நடக்கவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கற்களை அகற்றி பள்ளம் தோண்டினர். தொடர்ந்து பணி நடக்காததால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரவும் உள்ளே செல்லவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கால்வாயை உடைக்கும் போது குடிநீர் குழாயும் உடைந்ததால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, கால்வாய் பணியை விரைந்து முடிக்கவும், குடிநீர் குழாயை சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.