துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்
கடலுார், : கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.கடலுார் மாவட்டம், 49 மீனவ கிராமங்களை உள்ளடக்கியது. மாவட்டத்தில் மொத்தம் 250 விசைப்படகுகள் மற்றும் சிறு படகுகள், கட்டுமரங்கள் உட்பட 2,500 படகுகள் உள்ளன. கடலுார் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டிணம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு உட்பட பல்வேறு மீனவ கிராமத்தினர் பைபர் மற்றும் விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தினமும் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் மீன்கள் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். அந்த வகையில் ஞாயிற்று கிழமையான நேற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.நண்டு 300 ரூபாய், சிறிய இறால் 200, பெரிய இறால் 450, கனவா 250, சங்கரா 350, வஞ்சிரம் 650 முதல், 700 ரூபாய் வரை விற்பனையானது.