உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்தடையை குறைக்க பிரேக்கர் மின்துறைக்கு மக்கள் கோரிக்கை

மின்தடையை குறைக்க பிரேக்கர் மின்துறைக்கு மக்கள் கோரிக்கை

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மஞ்சக்குப்பத்தில் ஒரு பகுதி, பெரிய கங்கணாங்குப்பம், சின்னகங்கணாங்குப்பம், நாணமேடு, உச்சிமேடு, சுபாஉப்பலவாடி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் செம்மண்டலம் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் மாநகரத்திற்குள்ளே அமைந்திருந்ததால், நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இணைப்பில் இருந்த தேவனாம்பட்டினம், பெரிய கங்கணாங்குப்பம், மஞ்சக்குப்பம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளை செம்மண்டலம் துணை மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.இந்த பகுதிகள் யாவும் ஒரே இணைப்பில் இருப்பதால், ஏதாவது மின் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக நிறுத்த வேண்டியுள்ளது. இதனால்தான் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க துணை மின் நிலையத்தில் பிரேக்கர் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைத்தால்தான் எந்த பகுதியில் மின்சப்ளையில் பிரச்னை இருந்தால் அதை மட்டும் 'ஆப்' செய்துவிட்டு பழுதகற்றினால் மற்ற பகுதிகளுக்கு மின்சப்ளையில் பிரச்னை இருக்காது என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஏற்படும் மின் தடையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை