பணிச்சுமையால் அவதியுறும் உடற்கல்வி ஆசிரியர்கள்
கடலுார்: பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலி பயிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சங்கத்தின் மாநில தலைவர் சங்கரபெருமாள் விடுத்துள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை, மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படுவதில்லை. கடந்த 7 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாததால், பல அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லாத சூழ்நிலை உள்ளது.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்த வேண்டிய தேசிய திறனாய்வு தேர்வை, பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்த வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், மாற்றுப்பணியில் சென்று தேர்வு நடத்த வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப்பயிற்சி கொடுத்து குறுவட்டம் முதல் மாநில அளவிலான போட்டிகள் வரை பங்கேற்க செய்ய வேண்டும். பள்ளி பாடவேளையில் ஆசிரியர்கள் வரவில்லை எனில், மாணவர்கள் வெளியில் வராமல், அமைதியான முறையில் வகுப்பினை பார்த்துக்கொள்ள வேண்டும். பள்ளி முடிந்ததும் விளையாட்டில் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். ஒரே உடற்கல்வி ஆசிரியர், பல்வேறு பணிகளை செய்தாலும், உயர்கல்வி தகுதி இருந்தும் பதவி உயர்வு அளிக்கப்படுவதில்லை. உடற்கல்வி ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.