பஸ் ஸ்டாண்ட் கடை விவகாரம் கலெக்டரிடம் பா.ம.க., மனு
கடலுார்: வடலுார் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென, பா.ம.க.,வினர் மனு அளித்தனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க., கடலுார் கிழக்கு மாவட்ட தலைவர் காசிலிங்கம், மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு: வடலுார் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு, கடை ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் மூலம் கட்டப்பட்ட கடைகளில், ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பழைய அறிவிப்பில் ஏலத்தொகை 10 லட்சம் ரூபாய், 7 லட்சம், 5 லட்சம், 4 லட்சம் ரூபாய் எனவும், வாடகை 9 ஆயிரம் ரூபாய், 7,500, 7,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை நிர்ணயம் சிறு வணிகர்களை அழிக்கும் விதமாக உள்ளது. மற்ற எந்த நகராட்சியிலும் இவ்வாறான அதிகப்படியான தொகை நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே ஏலத்தொகை மற்றும் கடை வாடகை தொகையினை மற்ற நகராட்சிகளோடு ஒப்பீடு செய்து மிகக்குறைந்த அளவில் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.