போலீஸ் நிலைய டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணியிட மாற்றம்
கடலுார்: மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கடலுார் மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில், மூன்று ஆண்டுகள் பணி முடித்த வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது குறித்த கவுன்சிலிங் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. பணி மாறுதல் குழுவினர் முன்னிலையில், ஒவ்வொரு நபர்களிடமும் பணி புரிய விரும்பும் போலீஸ்நிலையங்ளை கேட்டு அறிந்து கவுன்சிலிங் முறையில், 74 டேட்டா என்ட்ரி அலுவலர்களை போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி.க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, டி.எஸ்.பி.,க்கள் தமிழ்இனியன், பிரதீப், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரவிச்சக்கரவர்த்தி, பார்த்திபன், ரகுபதி, கந்தன், அப்பாண்டைராஜ், சரவணகுமார், மாவட்ட காவல்அலுவலக நிர்வாக அலுவலர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.