வியாபாரி சந்தேக மரண வழக்கு தடயம் கிடைக்காமல் போலீஸ் திணறல்
கடலுார்: ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் இறந்த வழக்கில் தடயங்கள் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சிவா நகரைச் சேர்ந்தவர் தேவிசந்த் மகன் ராஜேந்திரகுமார்,39. இவர் தண்டபாணி நகரில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மதியம் கடை ஊழியர்கள் இருவர் வெளியே சென்று வந்தபோது, ராஜேந்திரகுமார் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து, கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால், இறப்பிற்கான காரணத்தை உறுதி செய்யும் தடயங்கள் சிக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.இந்நிலையில், ராஜேந்திரகுமார், கடையில் பைப் அறுக்கும் எந்திரத்தை பயன்படுத்தும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர்.