உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாரிசுகளை களமிறக்க அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் ...: கட்சி தலைமையிடம் சீட் பெற முயற்சி

வாரிசுகளை களமிறக்க அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் ...: கட்சி தலைமையிடம் சீட் பெற முயற்சி

கடலுார் மாவட்டத்தில் மூத்த அரசியல் பிரமுகர்கள், தங்கள் வாரிசுகளை வரும் தேர்தலில் களமிறக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்சித் தலைமை யாருக்கு 'சீட்' கொடுக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அடிப்படையில் தொகுதியை தயார்படுத்திக்கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில் மூத்த அரசியல் பிரமுகர்கள், தங்கள் வாரிசுகளை வரும் சட்டசபை தேர்தலில் களமிறக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக கட்சித் தலைமையில் உள்ள அதிகார வர்க்கத்திடம் பல்வேறு வகையில் 'ரூட்' போட்டு 'சீட்' பெற முயற்சித்து வருகின்றனர். குறிஞ்சிப்பாடி தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பன்னீர்செல்வம் அமைச்சராக பதவி வகிக்கிறார். இது தவிர தர்மபுரி மாவட்ட பொறுப்பாளராகவும், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மண்டல பொறுப்பாளராகவும் பதவி வகிக்கிறார். எப்போதும் பிசியாக இருக்கும் இவர் உள்ளூரில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், விழாக்கள், துக்க நிகழ்ச்சிகளில் தனது மகன் கதிரவனை பங்கேற்க செய்கிறார். இதனால் தொகுதியில் உள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமாவதோடு அவர்களோடு பழக்கமும் ஏற்படுகிறது. கட்சித் தலைமையில் முக்கிய இடத்தில் இருப்பதால் அவர் பதவியில் இருக்கும்போதே தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்துவிட வேண் டும் என ஆசைப்படுகிறார். அதற்காக சிதம்பரம் தொகுதியில் அமைச்சர் பன்னீர்செல்வம் முகாமிட்டு அதிகளவு நிதியை செலவு செய்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, 250 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம், வெளிவட்டசாலை, 6 கோடி ரூபாய் மதிப்பில் அறிவியல் மையம், புதிய உண்டு உறைவிடப்பள்ளி என, பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. அமைச்சர் பன்னீர்செல்வம் தான் போட்டியிட்டு வென்ற தொகுதியில் இப்பணிகளை செய்யலாம் என்றாலும் பரவாயில்லை. ஆனால் சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டு இவ்வளவு நிதியில் வளர்ச்சி திட்டப் பணிகளை செய்வதெல்லாம் தனது மகனை தேர்தலில் களம் இறக்குவதற்கான முயற்சிதான் என எதிர்கட்சியினர் கூறுகின்றனர். அமைச்சர் கணேசன், கடலுார் மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகிக்கிறார். இவரது மகன் வெங்கடேசன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளராக பதவி வகிக்கிறார். அமைச்சர் உள்ளூரில் இல்லாத நாட்களில் அவரது மகன் கட்சி நிர்வாகிகளுக்கு தேவையான உதவி செய்தல், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, விளையாட்டு போட்டி நடத்துபவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். அமைச்சர் கணேசன் தன் மகனை அரசியலில் பிரகாசிக்க இப்போதே ஓசையின்றி அடித்தளமிட்டு தயார் படுத்தி வருகிறார். கடலுார் தொகுதி எம்.எல்,ஏ., அய்யப்பன். கடலுார் தொகுதியில் 2 முறை வென்றதால் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர். இவரது மகன் பிரவீன் டாக்டராக உள்ளார். தமக்கு பின் தன் வாரிசு அரசியலில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தாம் செல்ல முடியாத நிகழ்ச்சிகளில் மகனை பங்கேற்க செய்வது, மருத்துவ முகாம்களில் கட்டாயமாக மருத்துவராக சேவை செய்வது, வீட்டிற்கு வருவோர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பது போன்றவற்றில் நற்பெயர் பெற்றவர். கதிரவன், வெங்கடேசன், பிரவீன் என, 3 பேரும் தேர்தல் களத்தில் குதிக்க அவர்களது தந்தைகளால் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிர எதிர்கட்சியான அ.தி.மு.க., வில் முன்னாள் அமைச்சர் சம்பத் மகன் பிரவீன் இதுவரை அரசியல் வாசனை இல்லாமல் உள்ளார். இருப்பினும் கட்சிக்காரர்கள், பிரவீனோடு தொடர்பில் உள்ளவர்கள் அவரது படத்தை பேனரில் போட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். இவர், அரசியல் நோக்கத்தோடு இதுவரை பயனிக்கவில்லை என்று கூறப்படுகிறது-நமது சிறப்பு நிருபர்- .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை