உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனியார் பஸ் டிரைவரின் அலட்சியம்; அரசு பஸ் மீது உரசியதால் பயணிகள் அச்சம்

தனியார் பஸ் டிரைவரின் அலட்சியம்; அரசு பஸ் மீது உரசியதால் பயணிகள் அச்சம்

கடலுார்; கடலுார் அருகே டிரைவரின் அலட்சியத்தால் முந்தி சென்றபோது, தனியார் பஸ், அரசு பஸ் மீது உரசியதால், பயணிகள் அச்சமடைந்தனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 11:40 மணியளவில், டிஎன் 32, என் 3403 என்ற தடம் எண் 155 அரசு பஸ் கடலுாருக்கு புறப்பட்டு வந்தது. கடலுார் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, விழுப்புரத்தில் இருந்து முன்னதாக புறப்பட்டு வந்த தனியார் பஸ்சை, அரசு பஸ் டிரைவர் முந்தி சென்றார்.இதையடுத்து, மேல்பட்டாம்பாக்கத்தில் இருந்து நெல்லிக்குப்பம் வரை அரசு பஸ்சை முந்துவதற்கு, தனியார் பஸ் டிரைவர் முயற்சி செய்தும் முடியவில்லை. இதை தொடர்ந்து, நெல்லிக்குப்பம் தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில், அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றினார். அப்போது, தனியார் பஸ் டிரைவர், முந்த முயன்றபோது, அரசு பஸ்சின் வலது புறத்தில் உரசியது. அதில், அரசு பஸ்சில் உரசுவது தெரிந்தும், தனியார் பஸ் டிரைவர் அலட்சியமாக இயக்கிச் சென்றார்.அப்போது, பயங்கர சத்தம் கேட்டதால், இரண்டு பஸ்களிலும் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இதில், அரசு பஸ்சின் வலது புற சைடு மிரர் உடைந்து சாலையில் விழுந்தது. பின், அரசு பஸ் டிரைவர், சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, கடலுார் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, கடலுார் பஸ் நிலையத்திற்கு வந்த, தனியார் பஸ்சை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மடக்கினர். இதையறிந்த தனியார் பஸ் உரிமையாளர், போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தனியார் பஸ்சை, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விடுவித்தனர்.அரசு பஸ் மீது உரசுவது தெரிந்தும் பயணிகளின் உயிர்கள் மீது அக்கறையின்றி அலட்சியமாக பஸ்சை ஓட்டிய தனியார் பஸ் டிரைவரின் செயல் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த டிரைவர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை