| ADDED : நவ 20, 2025 05:48 AM
காட்டுமன்னார்கோவில்: குடிநீர் பற்றாக்குறை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குமராட்சி அருகே சிவக்கம் கிராமத்தில், 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக, இந்த திட்டத்தில் குடிநீர் விநியோகம் திடீர் என நிறுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக ஈக்காடு என்ற பகுதியில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட நிலையிலும் போதிய அளவு குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். சிவக்கன் கிராம மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பெருங்காலுார் ஊராட்சி எல்லையில் ஒன்றரை கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனை கண்டித்து நேற்று சிவக்கம் பஸ் நிறுத்தம் அருகில், கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புத்துார் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.