உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலவச மனை பட்டா கோரி சாலையில் உணவு சமைத்து போராட்டம்

இலவச மனை பட்டா கோரி சாலையில் உணவு சமைத்து போராட்டம்

கடலூர்: பண்ருட்டி அருகே இலவச வீட்டுமனை பட்டா கோரி, பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள அங்குசெட்டிபாளையம் ஆதி திராவிடர் குடியிருப்பில் 40 ஆண்டுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வந்ததால், மனைப்பட்டா கேட்டு அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர். அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தினை அரசுடைமை ஆக்கி தகுதி அடிப்படையில் இலவச மனை பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.அந்த இடத்திற்கு தொடர்புடைய 2.76 எக்டர் இடத்தில் கட்டப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த மாதம் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் அகற்றினர்.ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும், மனைப்பட்டா வழங்க அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் டெண்ட் கொட்டகை அமைத்து பொதுமக்கள் குடியிருந்து வந்த நிலையில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மக்கள் பண்ருட்டி -மடப்பட்டு செல்லும் அங்குசெட்டிபாளையம் சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் உணவு சமைத்தும், பள்ளி மாணவர்கள் புத்தகம் படித்தும் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் புதுப்பேட்டை போலீசார் பேச்சு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !