மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்; கடலுாரில் அன்புமணி அறிவிப்பு
கடலுார்; மீனவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தப்படும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார். கடலுார், தேவனாம்பட்டினத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி, மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து பின் பேசியதாவது: மீனவர்களின் சாதாரண கோரிக்கைகளை கூட அரசு நிறைவேற்றாதது வருத்தமாக உள்ளது. மீன்பிடிப்பது பாதுகாப்பற்ற தொழில். உயிருக்கு பாதுகாப்பு இல்லை. காலம் காலமாக மீன்பிடி தொழில் செய்துவரும் வரும் மீனவர்கள், முன்னேற்றம் இல்லாத சமுதாயம். அதை மாற்றுவதற்கு தான் பா.ம.க., போராடுகிறது. லோக்சபாவில் ஒரு மீனவரை எம்.பி.,யாக்கியது பா.ம.க., தான். லோக்சபா குழு தலைவராக்கி பிரதமருடன் அமர்ந்து பேசும் அளவிற்கு உயர்த்தினோம். மீனவர் சமுதாயத்தை பட்டியலினத்தில் சேர்க்க மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாடு, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் மீனவர்கள் உள்ளனர். மீனவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு எனது தலைமையிலேயே போராட்டம் நடத்துவோம். துாண்டில் வளைவு அமைப்பது சாதாரண விஷயம். மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். மீனவர் சமுதாயத்திற்கு தி.மு.க., 25 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. மீன்பிடி தடைகாலத்தில் ஊக்கத் தொகையை உயர்த்தி தர வேண்டும். டீசல் மானியம் 20 சதவீதம் உயர்த்தி தருவோம் என்று கூறினர். ஆனால் நிறைவேற்றவில்லை. 50 சதவீதமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. சிப்காட் துவங்கிய நாளே மீன்பிடி தொழில் அழிந்துவிட்டது. பழங்குடி, மீனவர், வன்னியர் ஆகிய மூன்று சமுதாய இளைஞர்களிடையே ஒற்றுமை வேண்டும். அதை சூழ்ச்சி செய்து பிரிப்பதில் தி.மு.க,. பி.எச்டி., படித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து கடலுார் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தையும், துாண்டில் வளைவு அமைக்க வேண்டிய இடத்தையும் பார்வையிட்டார். சிவக்குமார் எம்.எல்.ஏ., பா.ம.க., தலைமை நிலையச் செயலாளர் செல்வக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள், கிராம பஞ்சாயத்தார்கள் உடனிருந்தனர்.