பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ரூ.10.78 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கல்
கடலுார்: பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டத்தில் 15 பயணிகளுக்கு ரூ.10,78,890 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். கடலுார் கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் பொதுமக்களிடமிருந்து 840 மனுக்கள் பெறப்பட்டன. இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் தட்கோ மூலம் செயல்பட்டு வரும் துாய்மைப் பணி செய்வோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்ட 11 பேருக்கு அடையாள அட்டை. தற்காலிக துாய்மைப் பணியாளர்கள் வாரிசுகளுக்கு பட்டப்படிப்பு படிக்க ரூ.1,500 உதவித்தொகை, அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 3 பயனாளிகளுக்கு ரூ.3,77,087 மானிய உதவி என மொத்தம் 15 பேருக்கு ரூ.10,78,890 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், துாய்மைப் பணியாளர் நலவாரிய மாநில உறுப்பினர் கண்ணன், தனி துணை கலெக்டர் தங்கமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.