ஆனைவாரி வடிகால் வாய்க்காலை துார்வார பொது மக்கள் கோரிக்கை
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி வடிகால் வாய்க்கால் துர்வாராமல் புதர்மண்டியுள்ளதால் வடகிழக்கு பருவமழை வெள்ளம் கிராமங்களில் புகும் அபாயம் உள்ளது. சேத்தியாத்தோப்பு அருகே விளக்கப்பாடி ஏரியில் துவங்கும் இந்த வடிகால் வாய்க்கால் முகந்தரியாங்குப்பம், தட்டானோடை, தர்மநல்லுார், பெரியநற்குணம், வீரமுடையாநத்தம், சின்னகுப்பம், ஆனைவாரி, வெள்ளாறுராஜன் வாய்க்காலில் முடிவடைகிறது. ஏறத்தாழ 6 கிலோ மீட்டர் நீளமுள்ள வடிகால் வாய்க்கால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தட்டானோடையில் துவங்கி தர்மநல்லுார், பெரியநற்குணம் வரை மட்டுமே துார்வாரி சுத்தப்படுத்தினர். அதன்பிறகு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு பெரியநற்குணத்தில் துவங்கி சின்னகுப்பம், ஆனைவாரியில் பாதியளவு மட்டுமே சிதம்பரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் துார்வாரி பாதியில் போட்டுள்ளனர். இதனால் வாய்க்கால் முடிவடையும் முகப்பு பகுதியில் புதர்மண்டியுள்ளதால் மழை வெள்ளக்காலங்களில் தண்ணீர் எதிர்த்து நின்று வடியாமல் வயல்களிலும், கிராமங்களிலும் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.பாதியளவு கிடப்பில் கிடக்கும் வாய்க்காலை விவசாயிகள் பொதுமக்கள் துார்வாரி சுத்தப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் இல்லை. இதை கருத்தில் கொண்டு, சிதம்பரம் பொதுப்பணித்துறை, சேத்தியாத்தோப்பு பாசன பிரிவு அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து வடகிழக்கு பருவ மழை வலுக்கும் முன்பாக வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.