கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் வட்டார கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம், சுரங்கங்கள், தலைமை அலுவலகம், நிர்வாக அலுவலகம், பள்ளிகள், கல்லுாரிகள் உட்பட பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, வெளி மாவட்டம் மட்டுமின்றி ஒடிசா, பீகார், ஆந்திரா, மேற் குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இவர்கள், நெய்வேலி டவுன்ஷிப், மந்தாரக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தங்கி பணிபுரிகின்றனர். நெய்வேலி டவுன்ஷிப்பிலில் இருந்து அருகில் உள்ள மந்தாரக்குப்பம், வடலுார், இந்திரா நகர், முத்தாண்டிகுப்பம், உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம், என்.எல்.சி., சார்பில் மிக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், தொழிலாளர்கள், கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் பல மணிநேரம் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை உள்ளது. வேலைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.