வீரமுடையாநத்தத்தில் வி.ஏ.ஓ., பணியிடம் காலி விரைந்து நிரப்ப பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீரமுடையாநத்தம் கிராம நிர்வாக அலுவலக எல்லைக்குட்பட்ட சின்னகுப்பம், பெரியகுப்பம், வீரமுடையாநத்தம் வருவாய் குக்கிராமங்களில் 5000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், 1500 ஏக்கர் நில பரப்பு உள்ளது. கிராமங்களில் பட்டா, சிட்டா, அடங்கல்களில் கையெழுத்து, சான்று பெறுதல், நில பதிவேடு, கணக்கு, பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்டவைகளுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து பெற்றுச் செல்கின்றனர். கிராமத்தினுள் திடீர் இறப்பு ஏற்பட்டால் தமிழ அரசின் ஈமச்சடங்கு பணம் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலம் மூலமே பெறமுடியும். இங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் தொடர் புகார் அடிப்படையில் வேறு இடத்திற்கு கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு புதிய கிராம நிர்வாக அலுவலர் யாரையும் புவனகிரி வருவாய்த்துறை அலுவலகத்திலிருந்து புதிதாக நியமனம் செய்யவில்லை. கிராம உதவியாளர் மட்டும் தினமும் வந்து அலவலகத்தை திறந்து வைக்கின்றார். ஆனால், வி.ஏ.ஓ., இல்லாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து பெறமுடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே வீரமுடையாநத்தம் கிராமத்திற்கு புவனகிரி வருவாய்த் துறை அதிகாரிகள் காலியாக உள்ள இடத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலரை பணியமர்த்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.