பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றில் ஆழ்துறை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. நெல்லிக்குப்பம் நகர மக்களுக்கு 10 இடங்களுக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் நாளுக்கு நாள் தரம் குறைந்து வருகிறது. இதை சரி செய்ய 9 கோடி ரூபாய் மதிப்பில் முள்ளிகிராம்பட்டு உட்பட 4 இடங்களில் பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நேற்று முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றில் இதற்கான பூமி பூஜை நடந்தது. நகர மன்ற தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், வி.சி., நகர செயலாளர் திருமாறன் பங்கேற்றனர். அப்போது, அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் , நாங்கள் விவசாயத்தை நம்பியே உள்ளோம். ஆழ்துளை கிணறு அமைத்தால் நிலத்தடிநீர் பாதிப்பதோடு விவசாயம் கேள்வி குறியாகும். எனவே, ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்த அனைவரும் கலைந்து சென்றனர்.