தொடர் மழைக்கு வைக்கோல் சேதம்
திட்டக்குடி, : திட்டக்குடி அருகே குறுவை நெல் அறுவடை செய்த வயல்களில் தொடர் மழை காரணமாக தேங்கிய மழைநீரால், வைக்கோல் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திட்டக்குடி அடுத்த அருகேரி, எரப்பாவூர், தொளார், மருதத்துார், மேலுார் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு, இயந்திரம் மூலம் குறுவை நெல் அறுவடை பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அறுவடைக்கு பின் வயல்களில் கிடந்த வைக்கோலை விவசாயிகள் விற்பனை செய்வதற்காகவும், தங்களின் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவது வழக்கம்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால், வயல்களில் மழைநீர் தேங்கி வைக்கோல் சேதமடைந்ததால் கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாமலும், விற்று வருவாய் ஈட்ட முடியாமலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'அறுவடைக்குப்பின், கிடைக்கும் வைக்கோலை, கால்நடை வளர்ப்பவர்கள் வைக்கோல் 250 முதல் 300 ரூபாய் வரை கொடுத்து வாங்கி செல்வது வழக்கம். திடீர் மழையால், வயல்களில் மழை நீர் தேங்கி, வைக்கோல், பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது' என்றனர்.