இட்லி மாவில் எலி மருந்து கலந்த வழக்கு; வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை
கிள்ளை : காட்டுமன்னார்கோயில் அருகே டிபன் கடையில் இட்லி மாவில் எலி மருந்தை கலந்த வாலிபருக்கு, 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழகடம்பூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 34; இவரும், பழஞ்சநல்லுார் கிராமத்தை சேர்ந்த சுந்தரம், 60; செட்டிதாங்கல் பகுதியில் தனித்தனியாக டிபன் கடை நடத்தி வந்தனர்.இந்நிலையில், சரிவர விற்பனை இல்லாததால் கடந்த 2017ம் ஆண்டு வெங்கடேசன் தனது டிபன் கடையை மூடிவிட்டார். ஆனால், சுந்தரத்தின் டிபன் கடையில் நன்றாக விற்பனை நடந்தது. ஆத்திரமடைந்த வெங்கடேசன், யாரும் இல்லாத நேரத்தில் சுந்தரம் கடைக்கு சென்று கிரைண்டரில் அரைத்து கொண்டிருந்த இட்லி மாவில் எலி மருந்தை கலந்து விட்டு, தப்பிச் சென்றுவிட்டார்.இட்லி மாவு நிறம் மாறியதால் சந்தேகமடைந்த சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கின் மேல் விசாரணை சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு, 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.