ஓரம் கட்டப்பட்ட பேரிகார்டுகள் சாலையில் விபத்து அபாயம்
வேப்பூர்: வேப்பூரில் பேரிகார்டுகளை ஓரம் கட்டி வைத்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை-திருச்சி, சேலம்-கடலுார் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இப்பகுதியிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்ல முடிவதால், தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வேப்பூர் வந்து செல்கின்றனர். மேலும், பல்வேறு அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு தினசரி வந்து செல்கின்றனர். இதனால், வேப்பூர் கூட்டுரோட்டில் 24 மணிநேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில, வேப்பூர் கூட்டுரோட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் தலா ரூ.15 ஆயிரம் மதிப்பில் 10க்கும் மேற்பட்ட பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. அதை முறையாக பயன்படுத்தாமல் அனைத்து பேரிகார்டுகளையும் சாலையோரம் ஓரம் கட்டி வைத்துள்ளனர். இதனால், முக்கிய நேரங்களில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் பாதசாரிகள் சாலையை கடக்க முடியவில்லை. சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.