| ADDED : நவ 19, 2025 08:21 AM
பெண்ணாடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு பெண்ணாடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பெண்ணாடம் பஸ் நிலையம் வந்து செல்வதால், காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் மாணவர்கள் வருகை மிகுந்து காணப்படும். இந்நிலையில், கிழக்கு மெயின்ரோடு முதல் பஸ் நிலையம் வரையிலான பஸ் நிறுத்தங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் மாணவிகளை குறிவைத்து, ரோமியோக்கள் பைக்குகளில் சுற்றுவது, 'வீலிங்' செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் கிண்டல் செய்வதும், அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதேபோன்று பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்களையும் ரோமியோக்கள் கலாய்ப்பது தொடர்கிறது.இதனை பொதுமக்கள் தட்டிக்கேட்டால் அவர்களையும் ரோமியோக்கள் மிரட்டுவதால் அவர்களும் கண்டும் காணாமல் போக வேண்டிய அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பெண்ணாடம் கிழக்கு மெயின்ரோடு முதல் பஸ் நிலையம் வரை காலை, மாலை நேரங்களில் சுற்றி வரும் 'ரோமியோ'க்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.