ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்
நெல்லிக்குப்பம்: வீட்டில் பீரோவில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், நெல்லிக்குப்பம் நெல்லிக்குப்பம் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் ஹாலில் கிறிஸ்துராஜனும், அறையில் அவரது மகள் ரக்சிதாவும் தூங்கியுள்ளனர். நேற்று காலை எழுந்த கிறிஸ்துராஜன் மனைவி இந்திரா, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். தெருக்கதவை பூட்டாமல் திறந்து வைத்திருந்துள்ளார்.காலை 8:30 மணிக்கு கிறிஸ்துராஜன் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்தபோது, லாக்கரில் இருந்த 6 சவரன் நகை மற்றும் ரூ.2.5 லட்சம் பணம் திருடு போயிருந்தது.அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அவர்கள் கொண்டு வந்த சாவி மூலம் லாக்கரை திறந்து நகை பணத்தை திருடி சென்றுள்ளனர்.இதுகுறித்து கிறிஸ்துராஜன் கொடுத்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.