ரூ. 67 கோடியில் புறவழிச்சாலை விரிவாக்கப்பணி தீவிரம்: விருதையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
விருத்தாசலம்: விருத்தாசலம் புறவழிச்சாலையில், 67 கோடி ரூபாயில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு திட்டப் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் விருத்தாசலம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்கின்றன. இதனால் விருத்தாசலம் நகரில் ஏற்படும் வாகன நெரிசலை தடுக்க, 2011ல் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., அருகில் இருந்து, மணவாளநல்லுார் பிரிவு சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.ஆனாலும் வாகன நெரிசல் குறையாததால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து அரசு பழத்தோட்டம், செராமிக் தொழிற்பேட்டை வழியாக உளுந்துார்பேட்டை மார்க்கத்தில், ஜங்ஷன் சாலையுடன் புதிய புறவழிச்சாலை போடப்பட்டது. இதன் மூலம் நெடுந்துார மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் புறவழிச்சாலையில் செல்கின்றன.இந்நிலையில், கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு வரை (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டதால், வேளாண் அறிவியல் நிலையம் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 37 கோடி ரூபாயில் சர்வீஸ் சாலையுடன், புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்தில் இருந்து வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் புறவழிச்சாலை 67 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மணிமுக்தாற்றில் புதிதாக மேம்பாலம், கல்வெர்ட்டுகள் அகலப்படுத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளை, நெடுஞ்சாலைத்துறை சென்னை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்த அவர், புதிய சாலையை டிரில்லர் மிஷன் மூலம் துளைத்து அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்தார். பின்னர், பணிகளை குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்டப் பொறியாளர் அய்யாதுரை, உதவி கோட்டப் பொறியாளர் வசந்தபிரியா, உதவி பொறியாளர் சங்கர், தரக்கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் ராஜசுவேதா உட்பட அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.