உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணையாற்றின் தெற்கு கரையை பலப்படுத்த ரூ.9.90 கோடி: மழைக்காலம் முடிந்த பின் பணியை துவங்க ஏற்பாடு

பெண்ணையாற்றின் தெற்கு கரையை பலப்படுத்த ரூ.9.90 கோடி: மழைக்காலம் முடிந்த பின் பணியை துவங்க ஏற்பாடு

கடலுார்: கடலுார் அருகே உள்ள பெண்ணையாற்று வெள்ள நீர் கிராமங்களுக்குள் உட்புகாமல் தடுக்கவும், ஆற்றுக்குள்ளேயே தண்ணீர்செல்லவும் தென்புறமுள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்காக 9.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்து அருகில் உள்ள நகரங்கள், கிராமங்களில் தண்ணீர் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இதை தடுப்பதற்காக பெரும்பாலான ஆறுகளின் கரைகள் பலப்படுத்துப்பட்டு வருகின்றன. கடலுார் மாவட்டம் மேற்கே உள்ள 18 மாவட்டங்களுக்கு வடிகால் மாவட்டமாக உள்ளது. மேற்கே பெய்து வரும் மழை மற்றும் வெள்ளநீர் கடலுார் மாவட்டத்தின் வழியாக ஓடும் கொள்ளிடம், கெடிலம், மணிமுக்தாறு, பெண்ணையாறு போன்றவற்றின் வழியாகத்தான் வங்க கடலில் வடிகிறது. எனவே வெள்ள காலங்களில் கடலுார் மாவட்டத்திற்குள் பாயும் பெண்ணையாற்று கரைகள் உடைந்து அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது கெடிலம் ஆற்றின் கரைகள் பலமாக இருந்ததால் தண்ணீர் வெளியேறி நகருக்குள் சென்று பாதிக்கப்படவில்லை. ஆனால் பெண்ணையாற்றில் பல இடங்களில் கரைகள் உடைந்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கடலோரப்பகுதியில் உள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா, சுபா உப்பலவாடி, தியாகுநகர், சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இக் கிராமங்களுக்கு நிவாரண பணிகளுக்கு கூட அதிகாரிகள் செல்ல முடியாத நிலையில் சாலையில் தண்ணீர் புரண்டு ஓடியது. அதைத்தொடர்ந்து பெண்ணையாற்றின் வடக்கு கரை பெரிய கங்கணாங்குப்பம் பாலத்தில் இருந்து கடல் பகுதி வரை 5.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே பெண்ணையாறு முழு கரையையும் பலப்படுத்தும் பணிக்காக பொதுப்பணித்துறை மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டது. அதன்பேரில் பெண்ணையாற்று பாலத்தில் துவங்கி குண்டு உப்பலவாடி வரை தென்கரைமுழுவதும் சீரமைக்க 9.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்த பின்னர் இப்பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, பல புதிய நகர்கள் பயனடைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை