உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

 சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடலுார்: கடலுாரில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில்,கடல் வழியாக ஊடுருவ முயன்ற 9 பேர் உட்பட 11 பேரை போலீசார் பிடித்தனர். கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் 'ரெட் போர்ஸ்' எனப்படும் போலீஸ் துறையில் பணிபுரியும் காவலர்கள் தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள். அவர்களை 'புளு போர்ஸ்' எனப்படும் கடலோர பாதுகாப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், கப்பல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் ஊருக்குள் நுழையாமல் பிடிப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை 6:00 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி துவங்கியது. கடலுார் கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாழங்குடா அருகே கடல் பகுதியில் 2 நாட்டிகல் மைல் தொலைவில், ஒரு படகில் வந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். மேலும் தேவனாம்பட்டினம் அருகே கடல் பகுதியில் 3 நாட்டிகல் மைல் தொலையில் ஒரு படகில் வந்த, 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் வந்து, சதி வேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரிந்தது. 9 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த போலி வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் சாகர் கவாச் ஒத்திகையில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ்நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சென்னையை சேர்ந்த, 2 பேரையும் பிடித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் போல நடித்த போலீசார் உள்ளிட்ட அனைவரையும் எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை