கரடு முரடான ஏரிக்கரை சாலை பள்ளி மாணவர்கள் தவிப்பு
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சின்னநற்குணம், அம்மன்குப்பம், பெரியநற்குணம் ஆகிய உள் கிராமங்களுக்கு பஸ் வசதிகள் கிடையாது. இங்குள்ள 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், எறும்பூர் பள்ளிக்கு ஏரிக்கரை பனஞ்சாலையில் நடந்தும், சைக்கிளிலும் வந்து செல்கின்றனர்.சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில் ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, கரடு முரடாக மாறியுள்ளது.இதனால் இந்த சாலையில் பயணிக்கும் மாணவ, மாணவிகள் கீழே விழுந்து அடிபடுவது வாடிக்கையாக உள்ளது. அடிக்கடி சைக்கிள்களும் பழுதாகி தள்ளி செல்லும் நிலை உள்ளது. கிராம மக்கள் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மூன்று கிராம மக்களின் போக்குவரத்து சாலையாக உள்ள சின்னநற்குணம் ஏரிக்கரை பனஞ்சாலையில் புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.