பெயரளவில் வாய்க்கால் துார்வாரும் பணி சேத்தியாத்தோப்பு விவசாயிகள் அதிருப்தி
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு எறும்பூர், ஆணைவாரி ஆகிய பகுதிகளில் பெயரளவில் வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருவதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி, எறும்பூர், மணக்காடு, ஆணைவாரி, பின்னலுார் வரை பாசன வாய்க்கால் விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலங்களில் பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக துார்வாராததால் புதர்மண்டி ஆக்கிரமிப்பால் சுருங்கியது.இதனால், மழைகாலங்களில் வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர் வயல்களில் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.இந்நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்காலை சரியாக அளவீடு செய்யாமல் பெயரளவில் துார்வாரும் பணியை செய்து வருகின்றனர். துார்வாரும் திட்டத்தின் பெயர்; எவ்வளவு தொலைவு, அகலம், செலவீடு தொகை என எந்த தகவல் பலகையும் வைக்கவில்லை. பெயரளவில் துார்வாரும் பணி நடப்பதால் வெள்ளக்காலங்களில் தண்ணீர் வடிந்து செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, வாய்க்கால் குறுக்கே சிறு, சிறு சிமெண்ட் குழாய்கள் பதித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் வாய்க்கால் வெட்டும் பணியை நேரடி ஆய்வு செய்து சரியான முறையில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.