மேலும் செய்திகள்
கள்ள நோட்டு 'மாஜி' வி.சி., நிர்வாகி கைது
03-May-2025
ராமநத்தம்:கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான முன்னாள் வி.சி., பிரமுகர் செல்வம், பல தொழிலதிபர்களை வலையில் விழ வைத்து, 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள தகவல் அம்பலமாகியுள்ளது. நோட்டு அச்சடிப்பு
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 39; வி.சி., கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீதான வழக்கு விசாரணைக்காக, மார்ச் 30ம் தேதி, ராமநத்தம் போலீசார் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றனர். அங்கு, 12 பேர் கொண்ட கும்பல் கள்ள நோட்டு அச்சடித்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவான செல்வம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.செல்வத்திடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 2021ல் இருந்து அதர்நத்தம் கிராமத்தில் அவர் தன் பண்ணை வீட்டில், ரகசிய அறை அமைத்து, ஜெராக்ஸ் மிஷின் வாயிலாக கள்ள நோட்டுகள் அச்சடித்துள்ளார். போலீஸ் சீருடை
சென்னை, பள்ளிக்கரணையில், தன் கட்டுமான நிறுவனத்திற்கு வாகனத்தில் கள்ள நோட்டுகளை எடுத்து சென்ற போது, போலீசில் சிக்காமல் இருக்க, தன் கும்பலுடன் போலீஸ் சீருடை, வாக்கி டாக்கி, ரைபிள் துப்பாக்கி பயன்படுத்தி உள்ளார்.மேலும், கள்ள நோட்டுகள் அடுக்கி வைத்த பெட்டிகளை வீடியோ எடுத்து, பல தொழிலதிபர்களுக்கு செல்வம் அனுப்பிஉள்ளார். ஆர்.பி.ஐ.,யில் இருந்து பணம் வந்துள்ளதாகவும், 1 லட்சம் ரூபாய் அனுப்பினால், 2 லட்சம் ரூபாயாக தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.தொழிலதிபர்களுக்கு கோவையை சேர்ந்த கமலி இடைத்தரகராக இருந்து, 9 கோடி ரூபாயை செல்வத்திற்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளார். பணம் கிடைக்காதவர்கள் தகராறில் ஈடுபட்ட போது, அவர்களை வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அழைத்து சென்று குஷிப்படுத்தியுள்ளார். மேலும், இரிடியம் இருப்பதாக கூறி, பலரிடம் பணத்தை வாங்கி இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. கன்சல்டன்சி
மோசடி பணத்தில் ஊட்டி, கேரளா மாநிலத்தில் ரிசார்ட்டுகள், குவைத் நாட்டில் கன்சல்டன்சி கம்பெனியை குத்தகைக்கு நடத்தி வந்துள்ளார். பல கோடி ரூபாய் வங்கி கணக்கில் உள்ளதாகவும், அதை மீட்க குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டுமென பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார்.செல்வத்தின் கீழ் 17க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு, பல மாநிலங்களில் தொழிலதிபர்கள், சாதாரண மக்களிடம், 30 கோடி ரூபாய் அளவில் பணம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
03-May-2025