உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண்ணாடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு... தீர்வு;  புறவழிச்சாலை அமையும் இடங்களில் ஆய்வு

 பெண்ணாடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு... தீர்வு;  புறவழிச்சாலை அமையும் இடங்களில் ஆய்வு

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் புறவழிச்சாலை அமையும் இடங்களில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.விருத்தாசலம் - ராமநத்தம் சாலையில் பெண்ணாடம் குறுவட்ட தலைமையிடமாகவும், தேர்வு நிலை பேரூராட்சியாகவும் உள்ளது. இவ்வழியாக பஸ், லாரி, சிமெண்ட் லோடு லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இங்கு அரசு, தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வங்கிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் சிமெண்ட் ஆலைகள், சர்க்கரை ஆலை உள்ளன. இதனால் பழைய பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொது மக்கள் கூட்டம் எந்நேரமும் அதிகளவில் காணப்படும். கிராமங்களில் இருந்து நகர பகுதிக்குள் வருவோர் பழைய பஸ் நிலையம் முதல் கிழக்கு வாள்பட்டறை வரையிலான சாலையில் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை சாலையில் நிறுத்திச் செல்கின்றனர்.மேலும், தள்ளுவண்டி கடைகளையும் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதுடன் வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால், பெண்ணாடத்தில் புறவழிச்சாலை அமைக்க வாகன ஓட்டிகள், பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதையேற்று, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்தாண்டு மே 15ம் தேதி கொசப்பள்ளம், அரியராவி, திருமலை அகரம், கொத்தட்டை, பெ.கொல்லத்தங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நிலஅளவீடு செய்யும் பணிகள் நடந்தது. தொடர்ந்து, 'ட்ரோன்' மூலமாக எல்லைகள் மற்றும் துாரம் அளவீடு பணிகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, ஜூன் மாதம் கொத்தட்டை அருகே ரயில் பாதையொட்டி, புறவழிச்சாலைக்கு மேம்பாலம் அமைக்க மூன்று இடங்கள் தேர்வு செய்து, அதில் போர்வெல் மூலம் மண் பரிசோதனையும் நடந்தது. இதனால் நகர பகுதியில் போக்குவரத்து பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புறவழிச்சாலை அமைக்க 10 மாதங்களாக எந்த பணிகளும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், நேற்று பகல் 12:00 மணிக்கு திட்டக்குடி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் புனிதா தலைமையிலான அதிகாரிகள் பெண்ணாடம் அடுத்த அரியராவி, பெ.கொல்லத்தங்குறிச்சி, கொத்தட்டை, திட்டக்குடி அடுத்த கொடிகளம் உள்ளிட்ட பகுதிகளில் புறவழிச்சாலை அமைய உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். தனியார் நிலங்கள், அரசு நிலங்கள் குறித்து ஆய்வு செய்தனர். புறவழிச்சாலை அமைந்தால் பெண்ணாடம், திட்டக்குடி நகர பகுதியில் போக்குவரத்து பாதிப்பு குறையும், பயண நேரம் குறையும் என்பதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை