உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு செம்மண் சாலை துண்டிப்பு: திடீர் வெள்ளப்பெருக்கால் இரு மாவட்ட மக்கள் அவதி

சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு செம்மண் சாலை துண்டிப்பு: திடீர் வெள்ளப்பெருக்கால் இரு மாவட்ட மக்கள் அவதி

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே, வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தற்காலிக செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், கடலுார், அரியலுார் மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், தெத்தேரி, ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, முதுகுளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.இதேபோல், கடலுார் மாவட்டம், பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், மாளிகைக்கோட்டம், அரியராவி, நந்திமங்கலம், வடகரை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இவ்வழியாக செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலுார் உட்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.ஆண்டுதோறும் மழைக் காலங்களில், தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், மீண்டும் செம்மண் சாலை அமைத்து பயன் படுத்துவதும் வழக்கமாக உள்ளது.சில நாட்களாக, பெஞ்சல் புயலால் கடலுார், அரியலுார் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணாமக அரியலுார் மாவட்டம், ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியே பாய்ந்த மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில், சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே போக்குவரத்து வசதிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டது.இதனால் கடலுார், அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராமங்களில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல், முருகன்குடி வெள்ளாறு மேம்பாலம் வழியாக 10 கி.மீ., துாாரமும், பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக 15 கி.மீ., துாரமும் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதால் இரு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதியடைந்து வருவது தொடர்கிறது.எனவே, இருமாவட்ட கிராம மக்கள் நலன்கருதி கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் பணியை விரைந்து முடித்து போக்க்குவரத்து வசதி ஏற்படுத்த இருமாவட்ட அமைச்சர்கள், கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் அலட்சியம்

கடந்த 2018ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 10 கோடியே 86 லட்சத்து 485 ரூபாய் மதிப்பில், புதிதாக பாலம் கட்டும் பணிகள் துவங்கியது. பாலம் பணி முடிந்த நிலையில், இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலைப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. மேலும், அரியலுார் மாவட்டத்தின் கடைகோடி கிராமமாக கோட்டைக்காடு உள்ளதால் அவ்வப்போது பெயரளவில் மட்டுமே அதிகாரிகள் அலட்சியமாக ஆய்வு செய்து பணிகளை துவக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பின்னர் கிடப்பில் போடுவதாகவும் இருமாவட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை