ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் சார் பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்
கடலுார்: கடலுார் மண்டலத்தில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.சுப முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய, பொதுமக்கள் விரும்புவதால் தமிழகம் முழுவதும் பிப்., 2ம் தேதி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் எனவும், ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என பதிவுத்துறை அறிவித்தது. அதன்படி, கடலுார் மண்டலத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் பத்திரப்பதிவு மாவட்டங்களில் மொத்தம் 60 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் உட்பட மண்டலத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பதிவுத்துறையில் காலியாக உள்ள 60 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறினர். இதனால், பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தது.பதிவுத்துறை பணியாளர்கள் நலன் சார்ந்த உரிமைகளை காத்திட பணி புறக்கணிப்பு போராட்டம் என பேனர் வைத்திருந்தனர்.இதனால், சார் பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பத்திர பதிவிற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.