நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட துணை இயக்குனர் பொற்கொடி, கடலுார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் திருபாதி, நல்லுார் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல் வரவேற்றார். லோட்டஸ் பள்ளி இயக்குனர் ஹரிகிருஷ்ணன், இணை இயக்குனர் பார்வதி ஹரிகிருஷ்ணன், முதல்வர் பிரியா துரைராஜ், பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் கண், காது, மூட்டு உட்பட 17 துறைகள் சார்ந்த மருத்துவ குழுவினர்கள் பங்கேற்று, பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து, திருமணம், கல்வி, ஓய்வூதியம், சுயதொழில் உள்ளிட்ட, 237 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர், தொழிலாளர் நல ஆணையத்தில் பதிவு செய்த பெண் ஆட்டோ ஓட்டுநர் செல்வக்குமாரி என்பவருக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்கப்பட்டது. பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.