பள்ளியில் கூடுதல் வகுப்பறை கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் கூடுதல் வகுப்பறை வசதி கோரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை, கும்மத்பள்ளி தெருவில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். போதிய கட்டட வசதிகள் இல்லாததால் ஒரே வகுப்பறையில் ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கூடுதல் வகுப்பறை வசதி கோரி மாணவர்களின் பெற்றோர் பல ஆண்டாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கூடுதல் கட்டட வசதி கோரி நேற்று மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு வழங்கிய புத்தக பை மற்றும் சீருடைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். இதனை ஆசிரியர்கள் வாங்க மறுத்தனர். இதனால், பள்ளி வளாகத்தில் பைகளை வைத்து விட்டு சென்றனர். மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், வட்டார கல்வி அலுவலர் உமாராணி, பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்க ளின் பெற்றோர், பள்ளி மேலாண்மைக்குழு, கல்விக்குழு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று போராட்டம் கைவிடப்பட்டது. பிள்ளைகளை நாளை (இன்று) பள்ளிக்கு அனுப்புவதாக கூறி பெற்றோர் கலைந்து சென்றனர்.