உளுந்துார்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மறியல்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இருந்து உளுந்துார்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி, கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில், மங்கம்பேட்டை, உளுந்துார்பேட்டை, திட்டக்குடி, கம்மாபுரம், வேப்பூர், வடலுார் மற்றும் அதனை சுற்றியுள் கிராமபுற பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், கல்லுாரி நேரங்களில் விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை மார்க்கமாக கூடுதல் டவுன் பஸ் இயக்க கோரி, நேற்று பகல் 1:00 மணியளவில் கல்லுாரி முன்பு, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில், மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், மாணவர்களிம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், பகல் 1:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.