விளையாட்டு ஆர்வமிருந்தும் இடமின்றி மாணவர்கள் தவிப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் பல தனியார் பள்ளிகள் உள்ளன.தற்போது கல்வி, வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு சலுகைகள் அளிக்கிறது. இதனால் மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில் போதுமான விளையாட்டு மைதானங்கள் இல்லை. சிறிய இடங்களே உள்ளது. பல பள்ளிகளில் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் மாணவர்களின் விளையாட்டுக்கு அளிப்பதில்லை.தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ளது. ஆனால் மாணவர்கள் தேர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவதில்லை. மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக இருந்தும் மைதானங்கள் இல்லாததும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் விளையாட்டில் சிறந்து விளங்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, நெல்லிக்குப்பம் பகுதி பள்ளிகளில் மாணவ மாணவியரின் விளையாட்டு ஆர்வத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிகள் முன்வர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.