பள்ளி செல்வதாக கூறிவிட்டு ஊர் சுற்றிய மாணவர்கள் மீட்பு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில், பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றிய அரசு பள்ளி மாணவர்களை, வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு, நேற்று பள்ளியில் ஒப்படைத்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு சரிவர வராமல் இருந்தனர். இது தொடர்பாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பள்ளிக்கு வராத மாணவர்களை பற்றி விசாரிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, விருத்தாசலம் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோரிடம் வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது, சிலர் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, பள்ளிக்கு செல்லாமல் இருந்தது தெரியவந்தது. வருவாய்துறை அதிகாரிகள், அதுபோன்று ஊர் சுற்றிய மாணவர்களை பிடித்து, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமாரிடம் ஒப்படைத்தனர். தினசரி பள்ளிக்கு வர வேண்டும் என, மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், ஊர் சுற்றிய விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நான்கு மாணவியரும் ஒப்படைக்கப்பட்டனர்.