திட்ட பணிக்கான டெண்டர் விவகாரம்: நகராட்சி கமிஷனர் விளக்கம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் திட்டப் பணிகளுக்கான டெண்டர் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என, கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறியுள்ளார்.நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் கடந்த 5ம் தேதி சேர்மன் ஜெயந்தி தலைமையில் நடந்தது. அப்போது சுயேச்சை கவுன்சிலர் பாரூக் உசேன் பேசுகையில், 'கடந்த மாதம் 28 ம் தேதி சிமென்ட், தார் சாலைகள் 5 கோடி ரூபாய் மதிப்பில் போட டெண்டர் விடப்பட்டது குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.நகராட்சி தீர்மானத்திலும் டெண்டர் பற்றிய விவரங்கள் வரவில்லை.இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதால் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்' என்றார். இதே கருத்தை மற்ற கவுன்சிலர்களும் வலியுறுத்தியதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், டெண்டர் விவகாரம் தொடர்பாக கவுன்சிலர்களுக்கு கமிஷனர் கிருஷ்ணராஜன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:திட்டப் பணிகளுக்கு 25 லட்சம் வரை கமிஷனர், 25 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை நகராட்சி நிர்வாகத் துறை மண்டல இயக்குனர், 1 கோடி முதல் 10 கோடி வரை மாநில இயக்குனர், 10 கோடிக்கு மேல் தமிழக அரசும் அனுமதி அளிக்க அதிகாரம் பெற்றவர்கள்.இதுபற்றி தெளிவாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. டெண்டர் விபரங்கள் நகராட்சி இணையதளத்தில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படுகிறது எனக் கூறியுள்ளார்.